கடல் பிறக்கோட்டிய ‘ஐந்நூற்றுவர்’…!

0
320

பிரிட்டிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் கிழக்கிந்தியக் கம்பெனி, மேற்கிந்தியக் கம்பெனி என்றெல்லாம் வர்த்தக நிறுவனங் களை அமைத்து உலகெங்கும் வாணிபம் செய்து பல நாடுகளின் ஆட்சியையே கபளீகரம் செய்த வரலாறு நாம் அறிந்தது. அயல்நாடு களின் அரசியலில் தலையிடாவிட்டாலும் ஒரு காலத்தில் நமது முன்னோர்ர் இதுபோல் உலகெங்கும் வணிகம் செய்ததை வரலாற்று பதிவுகள் தெளிவாக கூறுகின்றன.

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்கள், அதில் இரண்டாம் பாகத்தில் சுந்தர சோழரை சந்திக்க வரும் வர்த்தக கூட்ட பிரதிநிதிகள் பற்றி கூறப் பட்டிருப்பதை அறிந்திருப்பார்கள். ‘நானா தேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர்’ என்ற பெயரால் இவர்கள் குறிப்பிடப்பட்டிருப்பார்கள்.உண்மையில் இவர்கள் பிரமாண்டமான ஒரு வணிகர் குழு ஆகும். தரை வழியாக இந்தியா முழுவதும், கடல் வழியாக இந்தோ னேசியா வரையிலும், மேலும் சீனா முதல் ஐரோப்பா வரையிலும் வாணிகம் செய்து  பொன்னும்,  மணியுமாக குவித்த சமூகம் இது. அந்தக்கால வணிகம் பற்றி குறுந் தொகை கூறுகையில், ‘பாலொடு வந்து கூழொடு பெயரும் பாடுடை இடையன்’ என்கிறது. இடையர் ஒருவர் பாலைக் கொடுத்து விட்டு வரகு, தினை முதலியவற்றை பண்டமாற்றாக பெற்றாராம். பரதவர்கள் நெல் பெற்றுக் கொண்டு மீனை கொடுத் தார்களாம். காட்டில் வாழும் வேடர்கள் யானைத் தந்தத்தை அந்தக்கால மது பான சாலையில் கொடுத்து ‘சரக்கு’ வாங்கி அடித்திருக்கிறார்கள்.

‘யானை வெண்கோடு கொண்டு நறவு நொடை 
நெல்லின் நாண்மகிழ் குடித்து…’ என்னும் பாடல் வரிகள் இதனை உணர்த்துகின்றன. இதன் மூலம் நெல்லரிசியில் தயாரிக்கப்பட்டது அந்த மதுபானம் என்பதை அறியலாம்.

சங்ககாலத்திலும் நாணயங்கள் புழக்கத்தில் இருந்துள்ளன. ஊர் ஊராக போய் உப்பு மூட்டைகளை விற்ற உமணர்கள் பெரும்பாலும் நாணயங்களை பெற்றுக்கொண்டு தான் உப்பு வணிகம் செய்தனர். காரணம் உப்பு அப்படி விலையேறிய பொருள் ஆகும். மாட்டு வண்டிகளிலும், கழுதை வண்டிகளி லும் கூட்டமாக தரை வாணிகம் நடை பெற்றுள்ளது. இவற்றுக்கு வணிக சாத்து என்று பெயர் வழங்கப்பட்டது.

சிலப்பதிகாரத்தில் வரும் கோவ லனின் தந்தை மாசாத்துவான். கண்ணகியின் தந்தை மாநாய்கன். இலக் கியவாதிகள் உட்பட பலரும் இது அவர்களுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் என்று நினைக்கின்றனர். இது தவறு. தரை வழி வாணிகம் செய்வோருக்கு மாசாத் துவான் என்பது பொதுப்பெயர். அதேபோல் கடல் வழி வாணிகம் செய்வோ ருக்கு மாநாய்கன் என்பது பொதுப்பெயர். இங்கே தரை வழி வணிகரும், கடல் வழி வணிகரும் தங்கள் வாரிசுகளான கோவலன்- கண்ணகிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுபோன்ற வணிகம் சிறப்பாக நடைபெற சாலை வசதிகள் தேவை. சங்ககாலத்தி லேயே இத்தகைய வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளன. காஞ்சி-புனே, கோவா-நாகை, கள்ளிக்கோட்டை- ராமேஸ்வரம் பெருவழிச்சாலைகள் குறிப்பிடத் தக்கவை. பெரும்பாலும் ஆற்றை ஒட்டியே இந்த சாலைகள் அமைந்துள்ளன. இவற் றுக்கு ஆதன் பெருவழி, வீர நாராயணன் பெரு வழி, அதியமான் பெருவழி, சோழ மாதேவி பெருவழி, ராஜகேசரி பெருவழி, மகதேசன் பெருவழி என்றெல்லாம் பெயர்கள் வழங்கின.

வணிக சாத்துக்கள் இவ்வழியே செல்லும்போது ஆங்காங்கே தங்கும் இடங்கள் உண்டு. இவற்றுக்கு ‘தாவளம்’ என்று பெயர்.வேம்படி தாவளம், மஞ்சிப்புல தாவளம், வண்டித் தாவளம், அறுபத்துநாலு சடிகை தாவளம் போன்ற பெயர்களை கல்வெட்டுகள் மூலம் அறியலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் ரயில் வசதி வரும் வரை இந்த பெருவழி சாலை களில்தான் வணிக போக்குவரத்து நடைபெற்றது. இத்தகைய வணிக குழுக்களில் முதலிடத்திலிருந்தவர்கள் ‘நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர்’. சுருக்கமாக இவர்களை ஐந்நூற்றுவர் என்பர். இவர்கள் தாங்கள் செல்லும் வழியில் கோயில்களுக்கு அளித்த மானியம், ஏரி-குளங்களை சீரமைத்தது, அரசர்களுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட தகவல்களை கொண்ட கல் வெட்டுகள், ஓலைச்சுவடிகள் நிறைய உள்ளன. கல் வெட்டு கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங் களிலும் இலங்கை, மியான்மர், சுமத்ரா உள் ளிட்ட வெளிநாடுகளிலும் கிடைத்துள்ளது இவர்களது வணிகத்தின் பிரமாண்டத்தை உணர்த்தும்.

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்சோழர் வரலாறு நூலில் இவர்கள் சிவப்பு நிறத்தில் அலங்கார சேணம் வைத்து எருமைகள் மீதும், கழுதை கள் மீதும் பொதிகளை கொண்டு சென்றதை விவரித்துள்ளார். இலங்கைக்கு கடல் வணிகம் செய்து திரும்பி வரும்போது ‘கரையான்’ என்பவர்கள் கொள்ளையடித்து நாசம் செய்தனர். இவர்களை எழுநூற்றுவர் என்போர் துணை கொண்டு ஐந்நூற்றுவர் அழித்த செய்தியை இலங்கையில் விஹார ஹின்னா என்ற ஊரில் உள்ள பௌத்த விஹாரத்தில் உள்ள கல் வெட்டு தெரிவிக்கிறது. இந்தோனேசியாவில் உள்ள ஜாகர்த்தா அருங் காட்சியகத்தில் கி.பி.1088 ஆம் ஆண்டு காலத்திய கல்வெட்டு ஒன்று பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளது. மதங்ககிரி வல்லவ தேசி உய்யக்கொண்ட பட்டினத்தில் ஐந் நூற்றுவர் கூடி செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி இது விளக்குகிறது.

கிட்டதட்ட 15 நூற்றாண்டுகளுக்குமேல் புகழ்பெற்று விளங்கிய இந்த ஐந்நூற்றுவர் இப்போது மிகவும் குறைந்துபோய் இவர்களின் மொத்த எண்ணிக்கையே 3641 பேர்தான் உள்ளனராம். இவர்கள் அவிநாசி பகுதியில் அதிகம் வசிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களது ஜாதி சங்கம் ஒன்றுகூடி, ‘நம் சமூகத்தில் இளைஞர்களுக்கு ஏற்ற நம் இன பெண்கள் கிடைக்காததால் பலரும் 40 வயதாகியும் திருமணம் ஆகாமல் உள்ளனர். அதனால் நம்மைப்போலவே சைவ உணவு சாப்பிடும் ஜாதிகளில் கலப்பு மணம் செய்துகொண்டு அப் பெண்களை நம் இன பெண்களாக சேர்த்துக்கொள்ளலாம்’ என்று தீர்மானமே நிறைவேற்றியுள்ளனர்.

வரலாறு தெரியாத அப்பகுதி மக்கள் இவர்களை கொங்கு செட்டியார்கள் என்று குறிப்பிடுவதாக இவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர். இவர்களில் பலர் தங்கள் இன பெண்கள் கிடைக்காமல் செட்டியார் இன பெண்களை திருமணம் செய்து கொண்டிருப்பதும் உண்மை.

ஆர்.ஆர்.கே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here