குக்கர் சின்னம் முடக்கமா? குழப்பத்தில் தினகரன் தரப்பு!

0
38

சவாலாக எதிர்கொள்வதா? அல்லது சட்டத்தின் துணையை நாடுவதா? என்று குழப்பத்தில் இருக்கிறார்களாம்… என்றபடியே உள்ளே வந்தார் மதியார்.

-வாருங்கள் மதியாரே… குழப்பத்தில் இருப்பது யாராம்? சவாலாக எதிர்கொள்வது, அல்லது கோர்ட் கதவை தட்டுவது என்னும் அளவுக்கு பிரச்னையை கொடுப்பது எதுவாம்? விவரமாக சொல்லுங்களேன்…

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரு அணிகளாக பிளவுபட்ட ஆளும்தரப்பு மீண்டும் ஒன்றாக இணைந்த நிலையில், தினகரன் தரப்பு மட்டும் தாங்கள்தான் உண்மையான கட்சி என்று தனி ஆவர்த்தனம் தொடங்கியது. இரு தரப்புக்கும் நீயா, நானா போட்டி நடைபெற்றுவந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தை ஆளும்தரப்பு கைப்பற்றியது. ஆனாலும்கூட ஜெயலலிதா காலத்திலேயே சசிகலாவால் கட்சியில் சேர்த்து விடப் பட்டவர்கள், மற்றும் ஆளும்தரப்பில் பல்வேறு காரணங்களால் ஓரங்கட்டப்பட்டவர்கள் என ஊருக்கு ஊர் இருக்கும் பெரிய கோஷ்டிகள் ஆதரிக்க முன்வந்ததால் எந்த செலவும் இல்லாமலே தினகரன் கட்சிக்கு ஊர், ஊராக நிர்வாகிகளும், கிளைகளும், அமைப்புகளும் சுலமாக அமைந்துவிட்டனவாம்.

-ரொம்ப பழைய விஷயங்களையெல்லாம் சொல்கிறீர்களே? அதன்பிறகு ஜெயலலிதா மறைவால் காலியான தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று அதில் ஆளும்தரப்பு, எதிர்தரப்பு இரண்டையுமே தோற்கடித்து தினகரன் தரப்பு அமோக வெற்றிபெற்றதே? இப்போது நீங்கள் சொல்லவரும் தகவல் என்ன என்பது பற்றி விளக்குங்களேன்..

ஆதிமுதலே தினகரன் தரப்புக்கு எதிராகத்தான் சென்டரில் செயல்பட்டுவருகிறார்கள். முதலில் தினகரனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தொப்பி சின்னம் ஒதுக்கப் பட்டது. பின்னர் திடீரென இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அவர் தரப்பில் அதே தொப்பி சின்னத்தை கேட்டபோது அதை ஒதுக்காமல் குக்கர் சின்னத்தை ஒதுக்கினார்கள்.

-அதனால் என்ன, அவரேதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சொன்னார். அதன்படி குக்கர் சின்னத்தையே வெற்றி பெற வைத்தும் காட்டி இரு கழகங்களுக்குமே கலக்கத்தை கொடுத்தாரே…!

இப்போது நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. இந்த தேர்தலில் தனது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட தினகரன் தரப்பு விரும்பியதாம். ஆனால் இதுதொடர்பான வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் நீதிமன்றத்தில் தேர்தல்ஆணையம், குக்கர் சின்னம் சுயேச்சை சின்னம்தான் என்றும், சுயேச்சைகள் இந்த சின்னம்தான் தேவை என்று கேட்டு பெற முடியாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மட்டுமே குறிப்பிட்ட சின்னத்தை கேட்க முடியும் என்றும் தெரிவித்துள்ளதாம்.

-அதாவது, முன்பு தொப்பி சின்னம் மறுக்கப்பட்டதுபோல் இப்போது குக்கர் சின்னத்தை யும் ஒதுக்காமல் வேறு ஏதாவது சின்னத்தை ஒதுக்குவார்கள் என்கிறீர்கள், அப்படித்தானே…

தேர்தல் ஆணையம் போகிற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு குக்கர் சின்னம் இரு கழகங்களின் சின்னங்களுக்கு இணையாக அறிமுகமாகியுள்ளது. தவிர, அந்தந்த ஊரிலும் இப்போதே குக்கர் சின்னத்தை சுவர்களில் இடம்பிடித்து பலரும் வரையத் தொடங்கியுள்ளார்களாம். இதனால் திடீரென குக்கர் சின்னம் இல்லை என்று சொன்னால் என்ன செய்வது என்று தினகரன் தரப்பு குழம்பிப் போயிருக்கிறதாம்.

-ஓஹோ… அதைத்தான், சவாலாக எடுத்துக்கொள்வதா, அல்லது சட்டத்தின் துணையை நாடுவதா? என ஆலோசிக்கிறார்கள் என்று சொன்னீர்களா? தினகரன் எத்தகைய உத்தேசத்தில் இருக்கிறாராம்?

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கிற்குப்பிறகு தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் அவ்வளவாக தினகரனுடன் நெருக்கமாக இல்லையாம். அண்டை மாநில நிர்வாகி புகழேந்தி மட்டும்தான் உடன் இருக்கிறாராம். அவர்தான், இதையும் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அவர்கள் ஒதுக்கும் சின்னத்தையே ஏற்றுக்கொள்வோம் என்று சொன்னாராம்.

-அப்படியானால் தினகரன் நீதிமன்றத்தை நாடலாம் என்று முடிவு செய்ததுபோல் அல்லவா தெரிகிறது?

இந்த விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி ஊடகங்களில் அதிகம் அடிபடும் வகையில் நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று தினகரன் கருதினாராம். ஆனால், இரு கழகங்களுமே தங்களுக்கு பெரும் போட்டி என நம்மை கருதுவதால் இந்த விவகாரத்தில் பெரிதாக விளம்பரம் எதுவும் கிடைக்காது என்று புகழேந்தி தரப்பில் சொன்னார்களாம். தவிர, கடந்த காலத்தில் எல்லா நீதிமன்ற வழக்குகளிலும் கிடைத்த முடிவுகளைப் பார்க்கும்போது நீதித்துறை மூலம் பெரிதாக சாதகமான முடிவை எதிர்பார்க்க முடியாது என்றும் சொல்லப்பட்டதாம்.

-அதற்காக நீதிமன்றத்தை நாடாமலேயே விட்டுவிட முடியுமா?

குக்கர் சின்னத்தில் ஜெயித்தபோது தினகரன் சுயேச்சைதான். அதன்பிறகுதான் கட்சி தொடங்கப்பட்டது. அதனால் சட்டப்படி உரிமை கோர முடியாது. தவிர, நீதிமன்றத்தை நாடுவதைவிட, இந்த விவகாரத்தில் சென்டரும், ஆளும் தரப்பு, எதிர்தரப்பு ஆகியவை யும் சேர்ந்து நமக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று மக்கள் மன்றத்தில் எடுத்து சொல்லவேண்டும் என்றும், முதலில் தொப்பி சின்னத்தை ஒதுக்கியவர்கள் இரண்டாம்முறை அதை ஒதுக்காமல் முட்டுக்கட்டை போட்டார்கள், இப்போது குக்கர் சின்னத்தையும் ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதையே பெரிதாக எடுத்துசொல்லி தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தை ஏற்றுக்கொண்டால் அதுவே கூடுதல் பலமாக மாறும் என்று எடுத்து சொல்லியிருக்கிறார்களாம். இதனால் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அதையே ஏற்றுக்கொண்டு தேர்தலை சந்திக்க தினகரன் தரப்பு தயாராகி வருகிறதாம். கடைசியாக ஒரு தகவல்… சூப்பர் நடிகரால் நியமிக்கப்பட்ட இளவரசன் மற்ற நிர்வாகிகளை அதிரடியாக பந்தாடியமாதிரி சூப்பர் நடிகரின் மருமகனான நடிகர் சிபாரிசில் வந்த இரு நிர்வாகிகள் மீதும் கைவைத்தாராம். இதனால் கொதித்துப்போன மருமகன், மாமியாரிடம் பஞ்சாயத்தை கொண்டுபோனதன் எதிரொலிதான் இளவரசனின் அதிரடி நீக்கமாம். அடுத்து நியமிக்கப்படுவது யாராக இருந்தாலும் தங்களது ஒப்புதலுடன்தான் நிர்வாகியாக நியமிக்கப்பட வேண்டும் என்று குடும்பத்தில் இருந்து பிரஷர் எழுந்துள்ளதாம். அவ்வளவுதான் தகவல்கள்… என்றபடியே விடைபெற்றார் மதியார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here