தேசிய தலைகள் கொதிப்பு : கேரள செங்கொடிகள் கடுப்பு!

0
41

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்த கதையாக எதையோ நினைத்து நடவடிக்கை எடுக்கப்போய், இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவருவதால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்களாம்… என்றபடியே உள்ளே வந்தார் மதியார்.

-வாருங்கள் மதியாரே… இது எந்த தரப்பு தகவல்? யார், என்ன நடவடிக்கை எடுத்தார் களாம்? எப்படி அது தலைகீழாக மாறியதாம்? விவரமாக சொல்லுங்களேன்…

நான் சொல்ல வருவது தேசிய செங்கொடி தரப்பு தகவல். செங்கொடிகள் மூன்று மாநிலங்களில் ஆட்சியிலும், பல மாநிலங்களில் வலுவாகவும் இருந்த நிலை மாறி இப்போது கேரளா தவிர வேறு எங்குமே ஆட்சியில் இல்லை என்ற நிலைதான் நிலவுகிறதாம். மற்ற மாநிலங்களிலும் இங்கே நின்றால் நிச்சய வெற்றி என்கிற மாதிரி எந்த தொகுதியிலும் அவர்கள் பலமாக இல்லையாம்.

-இது திடீரென்று இப்போது ஏற்பட்ட நிலைமை இல்லையே. பல ஆண்டுகளாகவே இந்த நிலைதானே நிலவி வருகிறது?

மேற்குவங்கத்திலும் மம்தா வலுவான பின்னர் தேசிய தலைவர்களுக்கே நிலைமை ஆட்டம் கண்டுவிட்டதாம். பிரகாஷ் காரத் உள்ளிட்ட பெரிய தலைகளே கேரளாவில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று நாடாளுமன்றம் செல்லலாமா என்று யோசிக்கிறார் களாம்? கேரளாவில் காசர்கோடு, ஆலப்புழா, கண்ணூர், பாலக்காடு உள்ளிட்டவை செங்கொடிகள் வலுவாக இருக்கும் பகுதிகள். தேசிய செங்கொடி தலைகள் இவற்றை குறிவைக்க தொடங்கியுள்ளார்களாம். இதில் பிரகாஷ் காரத் கண்ணூர் தொகுதியையும், பிருந்தா காரத் பாலக்காடு தொகுதியையும் குறிவைத்துள்ளார்களாம். பிருந்தா இதற்குள் 4 முறை கண்ணூர் தொகுதிக்கு பல நிகழ்ச்சிகளில் தலையை காட்டி விட்டாராம்.

-பெரிய தலைகள் எந்த மாநிலத்திலாவது நின்று டெல்லிக்கு செல்வது காலம் காலமாக நடப்பதுதானே? கர்நாடகாவில் இந்திரா காந்தியும், சோனியா காந்தியும் நிற்க வில்லையா? ஏன், நம்மூர் திருநாவுக்கரசர், ப.சிதம்பரம் போன்றோர்கூட வெளி மாநிலங்கள் மூலம் ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தானே?

தமிழகத்தில் இரு கழகங்களும் மாறி,மாறி ஆட்சிக்கு வருகிற மாதிரி கேரளாவில் கதர்தரப்பும், செங்கொடிகளும்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கின்றன. இப்போது செங்கொடிகள் ஆட்சிதான் நடக்கிறது. இதில் ஆட்சிக்கு எதிரான வாக்குகளை பலவீனமாக்கிவிட்டால் இம்மாநிலத்தை உறுதி செய்துகொண்டுவிடலாம் என்று திட்டமிட்டுதான் அய்யப்பன் விவகாரத்தில் தீவிர நிலைப்பாட்டை செங்கொடிகள் எடுத்தார்களாம். இதன்மூலம் காவித்தரப்பு காலூன்ற தொடங்கி, எதிரான வாக்குகளை பிரித்துக்கொள்வார்கள் என்று திட்டமிட்டார்களாம்.

-கோயில் சமாச்சாரம் என்பதால் கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இவர்கள் நினைப்பதைவிட பெரிய அளவில் எதிர்ப்பு எழ ஆரம்பித்துவிட்டதா?

அதை ஏன் கேட்கிறீர்கள்? வலைதளங்கள்தானே உலக அளவில் செல்லக்கூடியவை. அந்த வலைதளங்களில் செங்கொடிகளைத்தான் மிகக்கடுமையாக விளாசுகிறார்களாம். காவித்தரப்புக்கு கேரளாவில் அஸ்திவாரமே இல்லாமல் இருந்த நிலை மாறி, கேரள காவித்தரப்பு வெப்சைட்டை 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின்பற்றுகிறார்களாம். கதர்தரப்பு வெப்சைட்டை மூன்றரை லட்சம் பேரும், செங்கொடி தரப்பை மூன்று லட்சம் பேரும்தான் பின்பற்றுகிறார்களாம்.

-அரசியல் ரீதியான விவகாரமாக இருந்தால் ஆதரவு இந்த கட்சி, அந்த கட்சி என்று பிரியும். ஆந்திராவில் வெங்கடாஜலபதியும், கேரளாவில் அய்யப்பனும் கட்சி, ஜாதி, இனம் என்றெல்லாம் கடந்து ஏராளமானவர்களை ஈர்த்தவர்களாயிற்றே? அப்படியிருக்க அய்யப்பனுக்கு எதிரான நடவடிக்கை என்றால் அது செங்கொடிகளுக்கு எப்படி பலமாக மாற முடியும்?

அதுதான் இப்போது பெரிய பிரச்னையாக எழுந்துள்ளதாம். தேர்தல் என்று வந்தால்தான் நிலவரம் என்னவென்பதே புரியுமாம். முன்பு இப்படித்தான் கர்நாடகாவில் தேவகவுடா வாக்கு வங்கியை பிளப்பதற்காக கதர்தரப்பு ஈத்கா மைதானம் பிரச்னையை கையில் எடுத்ததாம். ஆனால் அதன்மூலம் உள்ளே நுழைந்த காவித்தரப்பு ஆட்சியையே பிடிக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாம்.

-இப்போது கேரளாவில் என்ன நிலை, அதை சொல்லுங்களேன்?

கேரளாவில் நிலைமை எப்படி இருந்தாலும் அங்குள்ள தலைகள் அதுபற்றி கவலைப்பட மாட்டார்கள். வெற்றியும், தோல்வியும் மாறி, மாறிதான் வரும். ஆனால் தேசிய தலைகளை நிற்கவைத்துவிட்டு அதன்பிறகு நிலைமை தலைகீழானால் கட்சியின் ஒட்டுமொத்த அஸ்திவாரமும் தேசிய அளவில் ஆட்டம் கண்டுவிடுமே? இதனால் பிரகாஷ் காரத் உள்ளிட்ட தேசிய தலைகளை கேரளாவில் நிற்கும்படி சொல்லலாமா? அல்லது வேண்டாம் என்று தடுத்துவிடலாமா என்று புரியாமல் கேரள செங்கொடிகள் குழம்பிப் போயிருக்கிறார்களாம்.

-வெற்றி, தோல்வி என்பதே அடுத்தபட்சம். மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகளுக்குமேல் ஆட்சி செய்தது செங்கொடி தரப்பு. அம்மாநிலத்தை சேர்ந்த தேசிய தலைவர்கள் அங்கே நிற்க பயந்து கேரளாவுக்கு இடம்பெயர்கிறார்கள் என்றால் அத்துடன் மேற்குவங்கத்தில் செங்கொடிகள் சகாப்தம் முடிந்துவிட்டது என்றல்லவா ஆகிவிடும்? எதிர்காலத்தை கணக்கில் கொண்டாவது வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் அவர்கள் அங்கேயே நிற்பதுதான் அவர்களுக்கும், அவர்கள் சார்ந்த கட்சிக்கும் நல்லது.
ஆரம்பத்தில் செங்கொடிகள் இந்த திட்டத்தை தீட்டியபோது தேசிய தலைமை உற்சாகமாக ஆதரித்ததாம். இப்போது நிலைமை தலைகீழான பின்பு, உங்கள் மாநில நிலவரம் உங்களுக்கு அல்லவா தெரியவேண்டும் என்று குற்றச்சாட்டை இவர்கள் மீதே திருப்புகிறார்களாம். இதனால் மாநில செங்கொடி தலைமை ரொம்பவும் நொந்து போயிருக்கிறதாம். கடைசியாக ஒரு தகவல்…அரசியலில் இறங்கப்போவதாக வதந்திகள் வந்ததுமே ‘தல’ நடிகர் அதிரடியாக கொடுத்த மறுப்பு அவரது இமேஜை ரொம்பவே உயர்த்தியுள்ளது, அதே பாணியில் நீங்களும் அறிக்கை விட்டு விடுங்கள் என்று கில்லி நடிகருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார் களாம். சூப்பர் நடிகர் பாணியில் ஏதாவது பிரச்னையை கிளப்பித்தான் படங்களை ஓட வைக்க வேண்டியுள்ளது, இதில் அவர் பாணியில் நாம் எங்கிருந்து அறிக்கை விடுவது என்று கில்லி நடிகர் தரப்பு ஆதங்கப்படுகிறதாம். அவ்வளவுதான் தகவல்கள்… என்றபடியே விடைபெற்றார் மதியார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here