நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழா தொடங்கியது!

0
42

உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 462 -ஆம் ஆண்டு கந்தூரி விழா வருகின்ற 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி இன்று அதிகாலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும், நிகழ்வு நடைபெற்றது.

நாகூர் நகரில் உள்ள இந்த நாகூர் ஆண்டவர் தர்கா இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாது சர்வ மதத்தினருக்குமான ஒரு பிரார்த்தனை தலம் என்றே கூறலாம்.வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வரும் கிறிஸ்தவர்களுக்கும், இப்பகுதியிலுள்ள பிற கோயில்களுக்கு வரும் இந்துக்களும் நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வந்து வணங்காமல் செல்வதில்லை. வருகிறவர்களின் வாட்டங்களைப் போக்கி நன்மை பயக்கிறார் இங்கு அடங்கியிருக்கும் நாகூர் ஆண்டவர்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியா நகருக்கு அருகில் உள்ள மாணிக்கப்பூர் என்ற ஊரில் சையது ஹசன் குத்தாஸ் – பாத்திமா ஆகியோரின் மகனாக 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்தவராகக் கருதப்படும் ஷாகுல் ஹமீது ஒலியுல்லா என்பவர் தான் தற்போது நாகூர் ஆண்டவராக வழிபடப்படுகிறார். வாலிப பருவத்தில் மாணிக்காப்பூரிலிருந்து குவாலியர் சென்று முகம்மது ஹைஸிடம் ஞானதீட்சை பெற்ற ஷாகுல் ஹமீது ஒலியுல்லா பிறகு லாகூர், அரேபியா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று இறை ஒளி பெற்றார்.

பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று இறைப்பிரசங்கம் செய்து தனது இறுதி நாட்களில் தஞ்சை வழியாக நாகூர் வந்தடைந்தவர் பின்னர் இங்கேயே தங்கி பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி 1558-ம் ஆண்டில் மறைந்தார். அதன்பிறகு 1559-ம் ஆண்டில் அவர் நினைவாக முதல் கந்தூரி விழா கொண்டாடப்பட்டதாக தர்காவின் வரலாறு கூறுகிறது.

இந்த வகையில் நாகூர் ஆண்டவர் தர்காவின் 462-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா வரும் 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இவ்விழாவை யொட்டி, தர்காவில் உள்ள 5 மினார்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முன்னதாக தர்கா பரம்பரை கலிபா முகம்மது மஸ்தான் சாஹிப் துவா ஓதி, விழாவைத் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் இப்ரா ஹீம் கான் கட்டிய சாஹிப் மினா ரில் முதல் பாய்மரம் ஏற்றப்பட் டது. அதைத் தொடர்ந்து, செய்யது மரைக்காயர் கட்டிக் கொடுத்த தலைமாட்டு மினார், மலாக்காவை சேர்ந்த பீர் நெய்னா என்பவரால் கட்டப்பட்ட முதுபக் மினார், பரங்கிப்பேட்டை நீதிபதி தாவுக் கான் என்பவரால் கட்டப்பட்ட ஓட்டு மினார், தஞ்சையை ஆண்ட மன் னர் பிரதாப்சிங் கட்டிய பெரிய மினார் ஆகியவற்றில் பாய்மரம் ஏற்றப்பட்டது.

விழாவில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here