ஜெ. பிறந்தநாளில் மாநாடு தினகரன் தரப்பு புது வியூகம்!

0
45

பெரிய அளவில் கூட்டத்தை கூட்டி பலத்தைக்காட்ட முடிவு செய்திருக்கிறாராம்… என்றபடியே உள்ளே வந்தார் மதியார்.

-வாருங்கள் மதியாரே… இது எந்த தரப்பு தகவல்? தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் கூட்டம் கூட்டி பலத்தை காட்ட முடிவு செய்திருப்பது யாராம்? எதனால் அப்படி திட்டமிட்டிருக்கிறாராம்? விவரமாக சொல்லுங்களேன்…

இரு கழகங்களின் செல்வாக்கான தலைவர்கள் மறைந்து விட்ட போதிலும், நாடாளு மன்ற தேர்தலும் நெருங்கிவிட்ட போதிலும்கூட, தமிழக அரசியலில் மட்டும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லையாம். மிகப்பெரிய தலைவர் மறைந்து 2 ஆண்டு களாகியும்கூட ஆளும்தரப்பில் இருந்து முக்கியப்பிரமுகர்களோ அல்லது தொண்டர்களோ அணி மாறவில்லையாம். இதே நிலைதான் எல்லா கட்சியிலும் இருக்கிறதாம்.

-இருக்கிற தலைகள் மறைந்தார்களே தவிர, அதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு பெரிய அளவில் தன்னை வளர்த்துக்கொள்ளக்கூடிய செயல்திறன் மிகுந்த தலைவர் யாரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரிய வில்லையே. அதனால்தானே இந்த வெற்றிடம்?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஆளும்தரப்பு தனக்கு ஒரே தொந்தரவாக தினகரன் தரப்பை மட்டும்தான் கருதுகிறதாம். ஆனால் தினகரன் மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் அவருக்கு இன்னும் கூடுதல் பலமாக ஆகிவிடக்கூடாது என்பதால் நேரடியாக மோதுவதை அடியோடு தவிர்க்கிறார்களாம்.

-அப்படியானால் மறைமுகமாக மோத திட்டமிட்டிருக்கிறார்களா? எந்த வகையில் மோதப்போகிறார்களாம்? 18 எம்எல்ஏக்கள் பதவி பறி போன பிறகும்கூட அவர்களில் யாரும் இந்த பக்கம் வந்தமாதிரி தெரியவில்லையே? யாரையாவது தூண்டிவிட்டு வழக்கு தொடுத்து வேண்டுமானால் வம்பு செய்யலாம். அதுவும் பெரிய அளவில் பலன் அளிக்காதே?

தினகரனை கடுமையாக விமர்சித்த அவரது குடும்ப உறுப்பினர் திவாகரன், தினகரனுக்கு போட்டியாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறாராம். அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்று தினகரன் கட்சி ஆரம்பித்தபோதே கட்சியின் பெயரில் அண்ணாவும் இல்லை, திராவிடமும் இல்லை. இதை எப்படி திராவிட இயக்கம் என ஏற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்ப்புக்குரல் எழுப்பிய அவர், போட்டியாக அண்ணா‚ திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

-அவர் தொடங்கிய கட்சி மன்னார்குடியை தாண்டி வேறு எங்குமே இருப்பதாக தெரியவில்லையே? வட்டார கட்சி என்றுகூட சொல்ல முடியாத அளவுக்கு அந்த ஊரில் மட்டும்தானே கூட்டத்தை கூட்டி காட்டும் நிலை உள்ளது?

இம்முறை திவாகரன் ஜெயலலிதா பிறந்தநாளன்று மன்னார்குடியில் பெரிய அளவில் கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். இந்த கூட்டத்தில் தினகரன் கட்சி விஐபிக்கள் பலருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதாம். தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அவருக்கு நெருக்கமான சிலருக்கே தூண்டில் வீசப்பட்டுள்ளதாம்.

-ஓஹோ… பலம் காட்ட முடிவு செய்துள்ளார் என்று நீங்கள் கூறியிருப்பது இவரைப்பற்றித்தானா?

பலம் காட்டும் அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய தலைவரா? இவ்வளவு காலம் அரசியல் பக்கமே வராதவராயிற்றே?

பலம் காட்டப்போகிறவர் திவாகரன் என்றா சொன்னேன்? இது நாள்வரை இல்லாமல் இப்போது திடீரென திவாகரன் கூட்டம் கூட்ட இறங்கியிருப்பதால் பின்னணியில் இருந்து ஆளும்தரப்பு தூண்டிவிடுகிறதோ என்று தினகரன் தரப்புக்கு சந்தேகம் எழுந்துள்ளதாம். அதனால் தலைநகர் சென்னையிலேயே ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி மாநாடு மாதிரி பிரமாண்ட கூட்டத்தை கூட்டிக்காட்டி அசத்த தினகரன் தரப்பு திட்டமிட்டுள்ளதாம்.

-இதுவரை அதுபற்றி எந்தவித தகவலும் இல்லையே?

மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நாடாளுமன்றத்தின் கடைசி பட்ஜெட் என்பதால் இது சம்பந்தமாகத்தான் மக்களின் கவனம் இருக்கும். இதையடுத்து 8-ந்தேதி எடப்பாடி அரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த அலைகள் எல்லாம் ஓய்ந்த பின்னர் 10-ந்தேதிக்கு மேல் இதுசம்பந்தமான அறிவிப்பை வெளியிடுவாராம். தலைநகரில் பெரிய அளவில் கூட்டத்தைக்கூட்டிக்காட்டினால் அது மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியமாக இருப்பதுடன் தன் கட்சியிலும் இப்படியும், அப்படியுமாக மனதளவில் ஊசலாடிக்கொண்டிருப்பவர்களை இழுத்துப்பிடிக்க உதவியாக இருக்கும் என்று கருதுகிறாராம்.

-தினகரன் தரப்பு கூட்டத்தை கூட்ட முடிவு செய்தால் அதைவிட பெரிய அளவில் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய கட்டாயம் ஆளும்தரப்புக்கும் ஏற்படுமே?

ஆளும்தரப்பில் என்ன திட்டம் வைத்திருக்கிறார்களோ, தெரியாது. ஆனால் இப்போதைக்கு தினகரன் தரப்பு மாநாடு மாதிரி பெரிய கூட்டத்தை தலைநகரில் கூட்டிக்காட்ட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பது மட்டும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் திவாகரன் கூட்டம் பற்றிய தகவலையே செல்லாக்காசாக்கிவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்களாம்.

-எதிர்தரப்பு கூட்டம் என்றாலே பல நேரங்களில் காக்கிகள் அனுமதி மறுத்து, கோர்ட் கதவைத்தட்டி அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது. இதில் தினகரன் தரப்புக்கு காக்கிகள் மூலம் எத்தனை இடையூறுகள் ஏற்படப்போகிறதோ?அவர் கூட்டத்தை கூட்டிக்காட்டும் வரை எதுவும் நிச்சயம் இல்லை என்றுதான்சொல்லவேண்டும்.

இந்த கூட்டத்திற்கு பிறகுதான் தினகரன் தரப்பு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள எப்படிப்பட்ட வியூகம் வகுக்கிறது என்பது குறித்து தெரிய வருமாம். இதை வெற்றிகரமாக நடத்திவிட்டால் இரு கழகங்களிலும் இடம்பெற முடியாத கட்சிகள் பலவும் தனது கூட்டணியை நாடிவரும் என்று தினகரன் நம்பிக்கையோடு இருக்கிறாராம். கடைசியாக ஒரு தகவல்… ராமர் கோவில் விவகாரத்தை தாங்களும் கையில் எடுக்க கதர் இளம் தலைவர் முடிவு செய்திருப்பது காவித்தரப்புக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளதாம். இதனாலேயே சென்டர் வசம் இருந்த ராமர் கோயிலை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தை திருப்பி ஒப்படைக்க முடிவு செய்தார்களாம். ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கை தொடங்கப்படுவது பற்றி இந்த பட்ஜெட் தொடரின் கடைசி நாளில் மோடி ஆற்றும் உரையிலேயே அறிவிப்பும் வெளியாக உள்ளதாம். அவ்வளவுதான் தகவல்கள்… என்றபடியே ஜூட் விட்டார் மதியார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here