0
38

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.

கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகின்றன.

கடந்த ஆண்டு முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு (வயது 63) திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

இடையிடையே உடல்நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டில்லி, மும்பை, மற்றும் கோவா-பனாஜியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த வாரம் அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் டில்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறுகையில்,”நேற்றிரவு முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. ஆகையால் அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகிறார். அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது. எனினும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும்,”மனோகர் பாரிக்கர் பதவி விலகினாலோ அல்லது அவருக்கு ஏதாவது ஆகிவிட்டாலோ கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும்” என்று துணை சபாநாயகர் லோபோ கூறியுள்ளார். இதனால் கோவா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
Previous article
Next article

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here