தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் உருவான விதம்…!

0
512

மொகலாயர்களுக்கு எதிராக சத்ரபதி சிவாஜி உருவாக்கிய மஹாராஷ்டிர சாம்ராஜ்ஜியம் விஜயநகரப் பேரரசுக்குப் பிறகு  தென்னகத்தின் அரக விளங்கியது. எனினும் சத்ரபதி சிவாஜி ஒருவர் மட்டுமே வீரம், நல்லொழுக்கம், நேர்மை, தேச மற்றும் தெய்வ பக்தி கொண்டவராக விளங்கினார். அவருக்குப் பின் வந்த மராட்டிய மன்னர்கள் மிதமிஞ்சிய போகங்களில் ஆர்வம் செலுத்தியதால் மராட்டிய பேரரசு துண்டு துண்டாக சிதறி சுருங்கியது.

தமிழகத்தில்  செஞ்சி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் மராட்டிய அரசு தொடர்ந்து நீடித்தது. தஞ்சையை ஆண்ட மன்னர்களில் மக்கள் மனம் கவர்ந்தவராக சரபோஜி மன்னர் விளங்கினார்.

இவர் கலைகளை வளர்ப்பதிலும், புலவர்களை ஆதரிப்பதிலும், இலக்கியங்களை சேகரிப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஒரு முறை சரபோஜி மன்னர் காசி யாத்திரை மேற் ண்டார். அவருடன் பரிவாரங்க ளும், பிரதானிகளும் சென்றனர். கொல்கத்தா நகரில் இருந்த அரசப் பிரதிநிதி ஒருவரை சரபோஜி சந்திக்க விரும்பினார்.

அவைப் பிரதானிகள் ஏற்பாடு செய்து அனுமதி பெற்றுத் தந்ததையடுத்து சரபோஜி அவரை சென்று சந்தித்தார். தமிழகத்தில் உள்ள அரசர் ஒருவர் தன்னை சந்தித்ததால் அந்த அரசப் பிரதிநிதி பெருமகிழ்ச்சியடைந் தார். அவர் திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பை படித்து இன்புற்றவர். சரபோஜி தமிழ்நாட்டு மன் னர் என்பதால் அவரிடம், ‘திருக்குறளை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். தமிழ் மூலநூலைப் பற்றி எனக்கு தெரியாது. அதன் சிறப்புக்கள் பற்றி எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்’ என்றார்.

சரபோஜி மன்னர் திணறிப் போனார். அவர் அண்டியவர்களை ஆதரிக்கும் ஈகை குணம் நிரம்பியவரே தவிர தமிழ் இலக்கியங்களில் அதிக கவனம் கொண்டவரல்லர். தாய் மொழி மராத்தி என்பதால் திருக்குறளைப் பற்றி அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆனாலும் சமயோஜித புத்தி கொண்டவர் என்பதால் சட்டென்று சமாளித்துக் கொண்டார்.

“என்னுடைய புத்தக சாலையில் திருக்குறள் போன்ற ஆயிரக்கணக்கான தமிழ் இலக்கியங்கள் உள்ளன. எல்லா நூல்களையும் படிப்பதற்கு எனக்கு நேரம் கிடைப்பது இல்லை. இம்முறை ஊருக்கு திரும்பிச் சென்றதுமே முதல் வேலையாக உங்களுக்கு திருக்குறள் மூலநூலையும், அது தொடர்பான அனைத்து தகவல்களையும் அனுப்பி வைக்கிறேன்..”

இவ்வாறு சொல்லி சமாளித்த சரபோஜி மன்னர் காசி யாத்திரை முடிந்து தஞ்சை திரும்பினார். திரும்பியதுமே உடனடியாக தமது பிரதானிகளை அழைத்து தமிழகம் முழுவதும் எங்கெங்கே தமிழ்ப் புலவர்கள் உள்ளனர் என்று கண்டறிந்து தகவல் அளிக்கும்படி சொன்னார்.

இது தவிர எங்கெங்கே நூல்கள், ஓலைச்சுவடிகள், ஏட்டுச் சுவடிகள் கிடைத்தாலும் தேடிக் கொண்டு வரும்படி சொன்னார். கிராமப்புற மக்கள் இவற்றில் எல்லாம் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால், தங்கள் வீடுகளில் ஓலைச் சுவடிகள் அல்லது ஏட்டுச் சுவடிகள் இருந்தால் அவற்றை தஞ்சை அரண்மனையில் கொண்டு வந்து கொடுக்கலாம் என்றும், நூல்களின் மதிப்பிற்கேற்ப தக்க சன்மானம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில், கோயில்களில் வைக்கப்பட்டிருந்த ஓலைச் சுவடிகள், ஏட்டுச் சுவடிகளையெல்லாம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். இதற்கென்று தனியே ஆட்களை நியமித்த சரபோஜி மன்னர் இவற்றையெல்லாம் துறை வாரியாக, ரக வாரியாக பிரித்து அடுக்க ஏற்பாடு செய்தார். பின் இவற்றையெல்லாம் பாதுகாத்து வைக்க கல்விக் கடவுள் கலைவாணியின் பெயரால் ‘சரஸ்வதி மஹால்’ என்ற நூலகத்தை நிறுவினார். 

பின்னர் தாம் வாக்களித்தபடியே கொல்கத்தா அரசப் பிரதிநிதிக்கு திருக்குறள் மூல நூலையும் மற்றும் பல அரிய பைந்தமிழ் நூல்களையும், அட்டவணை மற்றும் தகவல்களையும் அனுப்பி வைத்தார்.

பின்னாளில் இத்தகவல்களை தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் தாம் எழுதிய ‘பழையதும், புதியதும்’ என்ற நூலில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

தமிழின் தொல் இலக்கியங்கள் பலவும் அழியாமல் காக்கப்பட ஒரு வகையில் திருக்குறள்தான் காரணமாக இருந்தது எனலாம். இந்த சரஸ்வதி மஹால் தமிழ் இலக்கியங்கள் அழியாமல் பாதுகாக்கவும், நூலகங்களுக்கு எல்லாம் வரலாற்று முன்னோடியாகவும் இன்றளவும் விளங்கி சரபோஜி மன்னருக்கும், தமிழக வரலாற்றில் ஒரு அழியாத இடத்தை பெற்றுத் தந்துள்ளது.

  • ரஞ்சித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here